Thursday, May 21, 2009

தமிழர்களின் காவல் தெய்வமான பிரபாகரன்

தமிழ்ப் பெண்கள் கெளவரமாக ஈழத்தில் வாழ வழி செய்தவர் பிரபாகரன்தான். அவர் உயிருடன் இல்லை என்பதை நாங்கள் நம்ப மாட்டோம். அப்படி ஒரு வேளை அவர் உயிருடன் இல்லாவிட்டால் இனி அங்கு தமிழர்கள் மீண்டும் அடிமைகளாகத்தான் வாழ முடியும் என்று இலங்கையிலிருந்து தப்பி இந்தியா வந்துள்ள அகதிகள் கண்ணீருடன் கூறுகின்றனர்.

தமிழர் பகுதிகளில் ராணுவம் நடத்திய கொலை வெறித் தாக்குதலிலிருந்து தப்பி ஆந்தி மாநிலத்திற்கு வட இலங்கையில் உள்ள சவுதாலாவை சேர்ந்த கிருஷ்ணவேணி, சுகன்யா உள்ளிட்ட 15 பேர் படகு மூலம் தப்பி வந்தனர்.

அவர்கள் பிரபாகரன் குறித்த செய்திகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

கடவுளுக்கு மரணம் கிடையாது..

அவர்கள் கூறுகையில், இலங்கையில் நடந்த போரில் சிங்களர்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்று விட்டதாக சொல்கிறார்கள். இதை நாங்கள் நம்பமாட்டோம். பிரபாகரன் இலங்கை தமிழர்களின் கடவுள். அந்த கடவுளுக்கு மரணமே கிடையாது.

காரணம் என்னைப் போன்ற பெண்கள் இலங்கை மண்ணில் பாதுகாப்பாக வாழ வழி ஏற்படுத்தியது அவர்தான்.

நாங்கள் பள்ளியில் படிக்கும்போதுகூட சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை மிகவும் கேவலமாக நடத்துவார்கள். தமிழர்கள் வசிக்கும் கிராமங்களுக்குள் சிங்கள ரவுடிகள் புகுந்து பெண்களை கற்பழிப்பார்கள். வீடு, வீடாக வந்து ஆயுதங்களை காட்டி பணம் - நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்று விடுவார்கள்.

அவர்கள் மீது சிங்கள போலீசாரிடம் புகார் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். மாறாக புகார் கொடுத்த தமிழர்களை எங்கள் இனத்தவர் மீதா புகார் கொடுக்கிறாய். உனக்கு எவ்வளவு தைரியம்? என்று அடித்து உதைத்து விரட்டி விடுவார்கள். இல்லையென்றால் புகார் கொடுத்தவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளி விடுவார்கள்.

இதனால் சிங்கள ரவுடிகள் கற்பழிப்பு, கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபட்டால்கூட அங்குள்ள போலீஸ் நிலையங்களில் எங்களால் புகார் கொடுக்க முடியாது.

சிங்களர்களின் இந்த தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் பிரபாகரன். அவர் இருக்கும் வரைதான் அங்கு தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். அவர் இல்லாவிட்டால் சிங்கள அரசு தமிழர்களை மீண்டும் அடிமைகளாக மாற்றிவிடும்.

பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. அவர் இறந்து விட்டதாக சிங்கள ராணுவம் பொய் பிரசாரம் செய்து வருகிறது. இலங்கையில் வாழும் தமிழர்களின் கடவுள் பிரபாகரன். அவரது படத்தை வைத்துதான் நாங்கள் வழிபாடு நடத்தி வருகிறோம்.

தமிழர்களின் காவல் தெய்வமான அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம் என்று கண்ணீருடன் அவர்கள் கூறினர்.

No comments: